Thursday 30 April 2009

சிந்தியுங்கள் என் தமிழ் மக்களே! - பரமேஸ்வரன் [வீடியோ]



தனியே என்னிடம் வார்த்தைகள் ஏதுமில்லை...

Tuesday 28 April 2009

தோலால் செய்தவைகள் தான் வேண்டும் என அடம் பிடிப்பவரா நீங்கள்?[தோல் பை - வீடியோ]

சமீபத்தில் நண்பர் மூலமாக என்னை வந்தடைந்த படங்களை பார்த்ததும் தோன்றிய வரிகளை கருவெளியில் கிறுக்கிய பின்பு... சும்மா இருக்காமல் நான் செய்த சிறு முயற்சி...

நம்மளை மட்டும் சிந்தித்து சிந்தித்து செயல் பட்டு கொண்டே இருந்தோமெனில்... இன்னும் என்னென்ன விபரீதங்கள் நடைபெறுமோ? என்ற அச்சம் என்னை போலவே "உலகம் வெப்பமடைதலை" பற்றி அறிந்தவர்களையும் தொற்றி கொண்டிருக்கும் என்பதில் எனக்கு எந்த வேறுபட்ட கருத்துமில்லை.



தோலால் செய்தவைகள் தான் வேண்டும் என அடம் பிடிப்பவரா நீங்கள்?


எப்போதும் தோல்களால் செய்யப்பட்ட பொருட்கள் வாங்க வேண்டும் என்ற பேரவா கொண்டவரா நீங்கள்?

தோல்களால் செய்யப்பட்ட பொருட்கள் தான் வேண்டும் என அடம் பிடிப்பவரா நீங்கள்?

உயிர் - உணவு சங்கிலி பற்றியெல்லாம் படித்து கிழித்தவரா நீங்கள்?

உயிர் இருந்தாலும் இல்லையென்றாலும் கரப்பான் பூச்சிக்கு அஞ்சி ஓடுபவரா?

அப்படி இருந்தும் தோல் பைகளை தோளில் மாட்டி கொண்டு பந்தா விடுபவரா?

கீழ்காணும் வீடியோவில் வரும் புகைப்படங்களை பாருங்கள்... (வரிகளை படித்த பிறகு) முடிவை நீங்களே தேர்ந்தெடுங்கள்....

(சில விசயங்களை அடுத்தவங்க சொல்லி மாத்த முடியாது...
நம்ம சொல்லியே நாம் மாறுவது கிடையாது என்கிறீர்களா?)



கருவெளியில் நான் எழுதிய சில வரிகள்... உங்களுக்காக...

வினோதமானவர்கள் தான்!


காலணியிலிருந்து...
கைப்பை...
கால் சட்டை...
மேலாடை என
அத்தனையும்
தோலால் செய்திருக்க வேண்டும் என்பர்
இவர்...

கரப்பான் பூச்சிக்கு அஞ்சும்
அக்காவும் தங்கையும்
கொடுமைக்கு சில சமயங்களில்
அன்னையும் கேட்பார்கள்...
லெதர் கேண்ட் பேக் (தோல் கைப்பை)
வேண்டுமென்றே...

பாவம் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்...
வாயுக்குள் சென்றால்
வெளிவர இயலாத...
மலைப்பாம்புகளும்
அக்கைப்பைக்காக கொல்லப்படுவதை...


ஆசைக்கு...
அழக்குக்கென...
உயிர்களனைத்தையும்
கொண்டு குவித்துவிட்டால்...
அறிவியல் பாடத்திட்டத்தில்...
எனக்கு கற்பித்த உயிர் - உணவு சுழற்சியை
எப்படி சரிசெய்வோம்?

உறங்காத இரவுகள் கொடுத்து
பாடபுத்தகம் கொடுத்து
படிக்க செய்தீர்கள்...

உயிர் சங்கிலியை கெடுத்து...
நாளும் புது புது பாடம்
சொல்லி தருகிறீர்கள்...

நீங்கள் வினோதமானவர்கள்தான்....



வீடியோவையும் பார்த்திட்டு முடிவெடுங்கள்.... நல்ல முடிவா எடுங்க...



இவ்வீடியோவை காணொளி பகுதியில் வெளியிட்ட "அதிகாலை.காம்"க்கு நன்றி

Tuesday 14 April 2009

மாய இலை...


என் தங்கை... இன்று வெளியிட்டுருந்த அரச இலை ஓவியத்தை பார்த்ததும் தோன்றியதுதான் இங்கே உங்களுக்காக... அவரது படைப்புகளில் சில... மேலும் உங்கள் வியப்பை அதிகரிக்க... அவர் வலைக்கே செல்ல இணைப்பையும் கொடுத்துள்ளேன்...


வலை உலகில்...
இலையில் ஓவியம்...
மாயவலை உலகெங்கும் என்றபடி
ஜொலிக்குது... ஒரு இலை...
மாயக்கண்ணாடியாய் ஜொலிக்குது
இன்னொரு இலை...


நீங்க இன்னும் இரசிக்க..

படங்கள் : தங்கைக்கு நன்றி

Monday 13 April 2009

"Appraisal 2009" எத்தனை பேருக்கு இந்த நிலையோ?


இன்று காலை "Appraisal 2009" என்ற தலைப்பில் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த இமெயிலுடன் இணைக்கப்பட்டிருந்த படம் இது...

இதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன்...

எங்கதான் தேடி கண்டுபிடிச்சு போட்டோ எடுப்பாங்களோ தெரியல?
இல்ல எப்படித்தான் எதையாவது பார்த்து அதைப் பற்றி இப்படி யோசிப்பாங்களோ தெரியலப்பா?

இப்பவே எனக்கு கண்ணக்கெட்டுது....
அலுவலகம் சென்று வந்ததும் உங்கள் அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லுங்க...

இப்படித்தான் என் நண்பனுக்கு...(என்னோடனு சொல்ல முடியாவிட்டாலும்...)

Thursday 9 April 2009

போர்கள் எதற்கு?

சமீபத்தில் சில படங்களை பார்த்து கொண்டிருக்கும் பொழுது.. தற்செயலாய் கண்ணில் பட்ட இந்த படங்கள் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பியது... அது போர்கள் எதற்கு? என்பதே...













பலவாறு முயன்றும் பதில்கள் கிட்டவில்லை... திடீரென போன வருடம் ராஜஸ்தான் குண்டுவெடிப்பின் போது எழுதிய உணர்வுகள் மனதில் தோன்றவே... அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி... ஒளியின் பயணத்திற்கு விரைந்தேன்... விளைவு... உங்கள் கண் முன்னே... "போர்கள் எதற்கு?"

இதோ.... "அணுவைப் பிளந்து" என்ற தலைப்பில் நான் கொட்டிய உணர்வுகள்...

அணுவைப்பிளந்து...

எத்தனை பெயர் வேண்டுமானாலும்
வைத்து அழைத்து கொள்ளுங்கள்...


சுதந்திரப்போர்,
உரிமை மீட்பு,
அடிமை ஒழிப்பு,
அடக்குமுறை எதிர்ப்பு,
மண் மீட்பு,
விடுதலைப்போர்,
இறையின் ஆணை,
மண்ணின் மக்களுக்கே,
இன்னும் எதுவாகினும் சரி....
அணு அணுவாய் உடல்களை சிதைத்து,
சாம்பலையும் காற்றில் கரைத்து,
பல உயிர்களை குடித்து..
யார் வாழ்வதற்காக இப்பூமியை தயார் செய்கிறீர்கள்...
என் தோழர்களே?!

நீ இழந்ததாய் நினைக்கும் அனைத்தையும்
அனைவரும் இழந்த பின்புதான்...
நீ ஓய்வாயோ?! சொல்!

அணுவை துளைத்து பெரும் சக்தி கண்டு
நமக்காய் தந்தவரும், அவமானத்தால்
மறுபடியும் மறுபடியும் சாகும் சாபமாய்...
வாழ்கிறாயே உன் வாழ்வை!

பல உயிர்களை குடித்து
யார் வாழ்வதற்காக இப்பூமியை தயார் செய்கிறீர்கள்...
என் தோழர்களே?!


இதை pdf format- ல் நீங்கள் இங்கு மின்னிறக்கம் செய்து கொள்ளலாம்...




யாரும் மிஞ்சிடாத... மீண்டும் உருவாக்கப்பட வேண்டிய பேரழிவுக்குள்ளான மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் மட்டும் எச்சமாக விட்டு செல்லும் போர் எதற்கு?
இனியாவது சிந்திப்போமா?

Tuesday 7 April 2009

இத பத்து பேருக்கு அனுப்பினால்...

"மகாலெட்சுமி... உங்களுக்கு நற்செய்தியை கொண்டு வருவார்."



இதனை பத்து பேருக்கு அனுப்பினால்... 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு ஒரு நற்செய்தி கிட்டும் என்ற செய்தியுடன் வந்த இமெயில் இணைத்திருந்த புகைப்படம் இது. நல்லவேளை மற்ற இமெயில்களில் வருவது போல் அனுப்பாவிட்டால் "......."க்கு நடந்தது போல் உங்களுக்கும் தொடர் துன்பங்கள் வந்து சேரும் என்ற மிரட்டல்கள் இல்லை... ஆகையால் எந்தவித குழப்பமுமின்றி... அனுப்பியவருக்கே பத்து முறை அனுப்பி வைத்து விட்டேன்.

இது போல் சில நாட்களுக்கு முன் வந்த "ஏசு உனக்காகத்தான் உதிரம் சிந்தினார்" "உனக்காகத்தான் உயிர் நீத்தார்" என்ற செய்தியுடன் வந்த ஏசுவின் (உருவங்களின்) புகைப்படத்தொகுப்பும் என்னை மிகவும் அமைதியற்ற நிலைக்கு தள்ளி விட்டன.



முன்பெல்லாம் திருப்பதி,ஏழுமலையான்,மும்பை விநாயகர்,லெட்சுமி... வரிசையில் இப்பொழுது ஏசுவையும் சேர்த்து விட்டார்கள்.


இது போன்ற இமெயில்களின் நோக்கம் தான் என்ன? என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருந்தது... விடை கிட்டியபாடில்லை.... ஆனால் மேலும் பல கேள்விகள் எழுந்தன...

மதத்தை பரப்பும் ஒரு யுக்தியாக இருக்குமோ?

தெய்வத்திற்கும் விளம்பரம் தேவையோ?

ஒருவர் பயந்து பார்வேர்ட் செய்வதால் பரவுகிறதோ?

ஊடகங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமுனு யோசிப்பாங்கலோ?

இப்படி கேள்விகள்... அடுக்கடுக்காய் பெருகி கொண்டே போயின... இது போன்றவைகளுக்கு என்ன காரணம் இருக்க முடியும்... அதிகமான நபர்களை இச்செய்தி சென்றடைய வேண்டும் என்பதை தவிர...

இன்றைய விளம்பர உலகில் இது போன்றவைகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது என்பதை நான் மறுப்பதற்கில்லை... ஆனால் இத்தகைய மிரட்டல்களால் எத்தனை காலம் ஒரு மதமும், தெய்வமும், ஒரு விசயமும் ஒருவரிடம் இருக்க முடியும்.. நல்லவிதமான் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.

அருமையான இயற்கை காட்சியை எனது நட்பு வட்டாரத்திற்கு அனுப்ப எப்போதும் விரும்பும் நான், இது போன்ற இமெயில்களை என்னுடனே நிறுத்தி கொள்வதுண்டு. அப்படியே அனுப்புவதென்றாலும் யார் யார் இத்தகைய விசயங்களில் விருப்பம் உள்ளவர்களே அவர்களுக்கு மட்டுமே (மிரட்டல்களை எல்லாம் எடிட் செய்துவிட்டு) அனுப்பி வைத்து மகிழ்வேன்.


இனியும் தவறான விளம்பரங்களுக்கு பலியாக வேண்டாம். சரியான செய்தியை என்றாலும் தவறான் நபரிடம் கொண்டு சேர்த்தால் தவறாகிப்போகும். அட! இமெயில் பார்வர்ட் செய்வது எவ்வளவு முக்கியமோ? அவ்வளவு முக்கியம் எந்த விசயத்தை, யாருக்கு அனுப்புகிறோம் என்பது....


-------------------------------------------------------------------

விளம்பரங்களின் தாக்கம் பற்றி நான் உங்களுக்கு கூறத்தேவையில்லை... விளம்பரத்திற்கிடையில் படம் / நிகழ்ச்சிகளை டி.வியில் பார்த்து முடிக்கும் நமக்கில்லாத அனுபவமா? என்கிறீர்களா?

"நாளை என் படமே எனக்கு அனுப்பி வைக்கப்படலாம்...."

குறிப்பு :
இந்நிகழ்வு நிகழ காரணமாய் இருந்த இரு தோழர்களின் இமெயிலுக்கும் நன்றி...